இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? நிபுணர்கள் முன்னறிவிப்பு….

 

இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? நிபுணர்கள் முன்னறிவிப்பு….

கடந்த ஆகஸ்ட் மாத பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய புள்ளி விவரங்களை பொறுத்து இந்த வாரம் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கம் இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

முஹரம் முன்னிட்டு வரும் செவ்வாயக்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வாரமும் 4 தினங்கள் மட்டுமே பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறும். 

மும்பை பங்குச் சந்தை

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கடந்த வெள்ளிக்கிழமையன்று, வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் பேசுங்கள் என வாகனத்துறையினரிடம் கேட்டுக் கொண்டார். மேலும்,  மத்திய அரசும் இந்த விவகாரத்தில் உதவும் என்று உறுதி அளித்தார். இதனால் வாகன துறைக்கு ஒரு நம்பிக்கை கிடைத்துள்ளது. 

தொழில்துறை உற்பத்தி, பணவீக்கம் மற்றும் தயாரிப்பு துறை குறித்த முக்கிய புள்ளிவிவரங்கள் வரும் வியாழக்கிழமை வெளிவருகிறது. பொருளாதாரம் மந்தமாக இருக்கும் நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம்

இதுதவிர, அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு உள்ளிட்ட நிலவரங்களும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற தாழ்வை முடிவு செய்யும் என நிபுணர்கள் கணித்து உள்ளனர்.