இந்த வாரம் பங்குச் சந்தைகளை பதம் பார்க்க காத்திருக்கும் முக்கிய நிகழ்வுகள்!

 

இந்த வாரம் பங்குச் சந்தைகளை பதம் பார்க்க காத்திருக்கும் முக்கிய நிகழ்வுகள்!

செப்டம்பர் காலாண்டு பொருளாதார வளர்ச்சி, நவம்பர் மாத முன்பேர வர்த்தக கணக்கு முடிப்பு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மாதத்தின் கடைசி வியாழக்கிழமையன்று பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும். அதன்படி, வரும் வியாழன் மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் நவம்பர் மாத முன்பேர வர்த்தக கணக்கு முடிவுக்கு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

பொருளாதார வளர்ச்சி

2019 செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என ஏற்கனவே நிபுணர்கள் கணி்த்துள்ளனர். நிபுணர்களின் கணிப்பை காட்டிலும் வளர்ச்சி மிகவும் மோசமாக இருந்தால் அது பங்குச் சந்தைக்கு பெரிய அடியாக அமைந்து விடும். அதேசமயம் எதிர்பார்ப்புக்கு மாறாக வளர்ச்சி நன்றாக இருந்தால் சந்தையை கையில் பிடிக்க முடியாது. இதுதவிர அமெரிக்காவில் அக்டோபர் மாத புதிய வீடுகள் விற்பனை, செப்டம்பர் காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடு, சீனாவின் தொழில்துறை தொடர்பான புள்ளிவிவரம் போன்ற சர்வதேச நாடுகளின் முக்கிய புள்ளிவிவரங்களும் வெளிவருகிறது.

பங்கு வர்த்தகம்

மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.