இந்த வாரம் காளைக்கு வெற்றி! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்தது!

 

இந்த வாரம் காளைக்கு வெற்றி! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்தது!

இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 200 புள்ளிகள் உயர்ந்தது.

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான கடந்த திங்கட்கிழமையன்று பங்கு வர்த்தகம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது. இருப்பினும் அதற்கு அடுத்து வந்த 2 நாட்களும் முதலீட்டாளர்களை பங்கு வர்த்தகம் குஷிப்படுத்தியது. இருந்தாலும் வாரத்தின் கடைசி 2 வர்த்தக தினங்களில் (வியாழன், வெள்ளி) பங்கு வர்த்தகம் படுத்தது. இருப்பினும் ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

பங்கு வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு இந்த வாரம் உயர்ந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 69.03ஆக இருந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிகரித்தனர். 

அதேசமயம், மத்திய பட்ஜெட், ஜி20 உச்சி மாநாடு குறித்த எதிர்பார்ப்புகளால் முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டினர். இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இருப்பினும், ஒட்டு மொத்த அளவில் இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

பங்கு சந்தை

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு இந்த வாரத்தில் ரூ.1,51,94,621.68 கோடியாக உயர்ந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,50,47,206.54 கோடியாக இருந்தது. ஆக. இந்த வாரத்தில் ஒட்டு மொத்த அளவில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. 

கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் உயர்ந்து 39,394.64 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 64.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு  11,788.85 புள்ளிகளில் முடிவுற்றது.