இந்த வாரம் அள்ளி கொடுத்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்தது

 

இந்த வாரம் அள்ளி கொடுத்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்தது

இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்தது.

முகரத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே நடைபெற்றது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றம் தணிந்தது, மத்திய அரசு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது.

அமெரிக்கா-சீனா வர்த்தக போர்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது, சில்லரை விலை பணவீக்கம் கட்டுப்பாட்டு இலக்கை காட்டிலும் குறைவாக உள்ளதால் ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தின் போது வட்டியை குறைக்க வாய்ப்புள்ளது போன்ற சாதகமான அம்சங்களால் ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. 

ரூபாய் வெளிமதிப்பு

கடந்த 4 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.142.42 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த 6ம் தேதி பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.28 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.14 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 403.22  புள்ளிகள் உயர்ந்து 37,384.99 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 129.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,075.90 புள்ளிகளில் முடிவுற்றது.