இந்த வருஷம் 5.4 சதவீதம்தான் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்…. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த மூடிஸ்….

 

இந்த வருஷம் 5.4 சதவீதம்தான் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்…. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த மூடிஸ்….

2020ல் இந்தியாவின் பொருளாதாரத்தில் 5.4 சதவீதம் அளவுக்குதான் வளர்ச்சி இருக்கும் என மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது. முதலில் நம் நாட்டு பொருளாதாரத்தில் 6.6 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என இந்நிறுவனம் கணித்து இருந்தது.

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில் ஒன்றாக நம் நாடு இருந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில காலாண்டுகளாகவே சரிந்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாகச் சரிந்த நிலையில், 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாகக் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து அனைத்து தரப்பினருக்கும் கவலை ஏற்பட்டது. 

மூடிஸ்

இந்நிலையில் சர்வதேச முதலீட்டாளர் சேவை நிறுவனமான மூடிஸ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை தற்போது குறைத்துள்ளது. 2020ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 5.4 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி ஏற்படும் என அந்நிறுவனம் கணித்துள்ளது. முதலில் 6.6 சதவீதம் அளவுக்கு  இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி ஏற்படும் என மூடிஸ் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருளாதாரம்

மூடிஸ் நிறுவனம் இது தொடர்பாக கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக சரிவடைந்துள்ளது. நடப்பு காலாண்டில் பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீள தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். எந்தவொரு மீட்பும் நாங்கள் முன்பு கணித்ததை காட்டிலும் மெதுவாகவே இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன்படி, 2020ல் இந்தியாவின் பொருளாதாரத்தில் 5.4 சதவீதம், 2021ல் 5.8 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி இருக்கும். நாங்கள் முதலில் இதே ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தில் முறையே 6.6 சதவீதம் மற்றும் 6.7 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என கணித்து இருந்தோம் என தெரிவித்துள்ளது.