இந்த ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

 

இந்த ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் இந்த ஆண்டில், பாலகோட் தாக்குதல், முத்தலாக் தடை உள்பட பல முக்கிய நிகழ்வுகள் நாடே பேசும் மற்றும் விவாதம் செய்யும் அளவுக்கு நடந்துள்ளன. அதில் முக்கியமான சிலவற்றை நாம் பார்ப்போம்.

பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்ததால் அந்த மசோதா சட்டமானது. 

பாலகோட் தாக்குதல்

கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமான படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாலகோட்டில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள்  மீது  குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்.

தொடர்ந்து 2வது முறையாக பிரதமானார் மோடி

இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. நரேந்திர மோடி தொடர்ந்து 2வது முறையாக பிரதமாக பொறுப்பேற்றார்.

டாக்டர்கள் போராட்டம்

கடந்த ஜூன் மாதம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் இறந்த நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டனர். இதனையடுத்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி அந்த மருத்துவமனை டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இந்த ஸ்டிரைக் நாடு முழுவதும் தீவிரம் அடைந்தது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

முத்தலாக் தடை சட்டம்

கடந்த ஜூலையில் இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி கணவர் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் முத்தலாக் தடை மசோதாவை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து முத்தலாக் தடை அமலுக்கு வந்தது.

ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. மேலும் அந்த மாநிலத்தைத ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. கடந்த அக்டோபர் இறுதியில் புதிய யூனியன் பிரதேசங்கள் முறைப்படி உதயமானது.

சந்திரயான் 2

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் 2வை கடந்த ஜூலையில் விண்ணில் ஏவியது இஸ்ரோ. திட்டமிட்டப்படி, கடந்த செப்டம்பர் 7ம் தேதி அதிகாலையில் நிலவில் சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கடைசி நேரத்தில், நிலவின் மேற்பரப்பு மேல் 2.1 கி.மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 திட்டம் தோல்வி கண்டது. ஆனாலும் இஸ்ரோ மக்களின் மனதை வென்றது.

35 வருட பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி முறிவு

கடந்த அக்டோபரில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் பா.ஜ.க. விட்டு கொடுக்க மறுத்ததால் அந்த கட்சியுடான 35 ஆண்டுகால உறவை சிவ சேனா முறித்து கொண்டது. மேலும பரம எதிரியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து அந்தமாநிலத்தில் ஆட்சியை அமைத்தது.

அயோத்தி வழக்கு

கடந்த நவம்பரில், நீண்டகாலமாக இழுபறியாக இருந்த ராம் ஜென்ம பூமி-அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டி கொள்ள அனுமதி அளித்தது. மேலும் முஸ்லிம்கள் வேறுஇடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருளாதார வளர்ச்சி சரிவு

கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக சரிவடைந்தது. இது நாட்டில் பெரும் விவாதத்தை கிளப்பியது  மேலும் ஆளும் கட்சியான பா.ஜ.க.வும் பெரும் தலைவலியை கொடுத்தது.

குடியுரிமை திருத்த சட்டம்

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதையடுத்து அது சட்டமானது. இந்த சட்டத்தை எதிர்த்து இன்று வரை எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.