இந்தோனேசியாவில் வங்கதேச குடியேறிகள் 200 பேர் கைது

 

இந்தோனேசியாவில் வங்கதேச குடியேறிகள் 200 பேர்  கைது

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியதாக வங்கதேச நாட்டினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியதாக வங்கதேச நாட்டினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமாத்ரா மாகாணத்தின் தலைநகரான மேடானில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர்அந்நாட்டு காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தோனேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்ளூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து இரண்டடுக்கு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவருமே 30 வயதுக்கும் கீழுள்ள ஆண்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த குடியேறிகள் உணவின்றி பல நாள்கள் தவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த இவர்கள் மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் நோக்கத்துடன் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. “இவர்கள் படகு வழியாக வந்திருக்கக்கூடும் என எண்ணுகிறோம். ஏனெனில் இவர்களிடம் எந்த ஆவணங்களும் கிடையாது,” என மேடான் நகர குடிவரவுத்துறை அதிகாரி பெர்ரி மோனங் ஷிஹிடே குறிப்பிட்டிருக்கிறார்.

இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இவர்களை நாடு கடத்துவது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவின் சுமாத்ரா பகுதியில் படகு வழியே தஞ்சமடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.