இந்து மக்களின் விருப்படிதான் இந்தியா இயங்கும்- பா.ஜ. தலைவரின் சர்ச்சை பேச்சு

 

இந்து மக்களின் விருப்படிதான் இந்தியா இயங்கும்- பா.ஜ. தலைவரின் சர்ச்சை பேச்சு

மகாராஷ்டிரா பா.ஜ. தலைவரும், அம்மாநில வருவாய் அமைச்சருமான சந்திரகாந்த் பச்சு பாட்டீல் சமீபகாலமாக எதிர்மறையான செய்திகளில் அதிகம் அடிபடுகிறார். அண்மையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட கோலாபூர் மாவட்டத்தை பார்வையிட சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனது குறைகளை கூறி வசதிகளை செய்து தரும்படி கோரிக்கை விடுத்தார். உடனே அந்த நபரிடம் சந்திரகாந்த் கடுமையாக நடந்து கொண்டார். இது அந்த பகுதி மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், தேசிய கணபதி திருவிழாவுக்கான விருது வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பா.ஜ. தலைவர் சந்திரகாந்த் பச்சு பாட்டீல் பேசுகையில் கூறியதாவது: இந்து பெரும்பான்மையினரின் விருப்பப்படிதான் இந்தியா இயங்கும். விநாயகர் விழா கலைநிகழ்ச்சிகளை மதியம் 12 மணிக்கு பார்க்க வேண்டும் என்று அவர்கள் யோசித்தால் அதற்கான ஏற்பாடுகள் நடக்கும்.

நிர்வாகிகளும் இந்துக்கள்தான். அவர்களும் விநாயகர் திருவிழாவை தனது குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும். நிர்வாகம் எப்போது நமக்கு பிரச்சினையைதான் உருவாக்குகிறது என்ற எண்ணம் ஏற்பட கூடாது. இவ்வாறு அவர் பேசியிருந்தார். சந்திரகாந்த் பச்சு பாட்டீலின் இந்த பேச்சு தற்போது கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.