இந்துக்களின் நம்பிக்கையை கேலி செய்வதுதான் அவர்களின் பழக்கம்- காங்கிரசை சாடிய சிவராஜ் சிங் சவுகான்

 

இந்துக்களின் நம்பிக்கையை கேலி செய்வதுதான் அவர்களின் பழக்கம்- காங்கிரசை சாடிய சிவராஜ் சிங் சவுகான்

இந்திய கலாச்சாரம் மற்றும் இந்துக்களின் நம்பிக்கையை கேலி செய்வதுதான் அவர்களின் வழக்கம் என காங்கிரசை சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடினார்.

2016ல் பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, கடந்த சில தினங்களுக்கு முன் முதல் ரபேல் போர் விமானத்தை நம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிரான்ஸ் நிறுவனம் ஒப்படைத்தது. இதனையடுத்து ரபேல் போர் விமானத்துக்கு ராஜ்நாத் சிங் ஆயுதபூஜை செய்தார். 

ரபேல் விமானத்துக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்

இதனை வழக்கம் போல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர். குறிப்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இது குறித்து கூறுகையில், ராஜ்நாத் சிங் பூஜை செய்தது நாடகம் என விமர்சனம் செய்து இருந்தார். காங்கிரசின் விமர்சனத்துக்கு மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவராஜ் சிங் சவுகான் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

மல்லிகார்ஜூன் கார்கே

இது தொடர்பாக சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: காங்கிரஸ் ஒரு தந்திரகார கட்சி. இந்திய கலாச்சாரத்தையும், இந்து மக்களின் நம்பிக்கையையும் கேலி செய்வதே காங்கிரஸ் கட்சியின் வழக்கம். இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து நம்பிக்கைகளுடன் அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ரபேல் போர் விமானத்துக்கு ராஜ்நாத் சிங் ஆயுதபூஜை செய்ததில் காங்கிரசுக்கு என்ன பிரச்னை? ஓம், இந்துமதம் அல்லது சனாதன் கலாச்சாராத்தை அவர்கள் எதிர்க்கிறார்களா? அவர்கள் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு அம்மா மற்றும் மகன் கட்சியாக மாறி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.