இந்திரா காந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

 

இந்திரா காந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்

டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்  101-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள சக்தி ஸதலத்தில் இந்திராகாந்தியின் நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்

அதேபோல், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த தினமான இன்று அவருக்கு  மரியாதை செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒரே மகள் இந்திராகாந்தி. இவர் கடந்த 1917-ஆம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிறந்தார். இந்தியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி கடந்த 1966-ஆம் ஆண்டு மரணமடைந்த பின்னர் நாட்டின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார்.

பாகிஸ்தான் போரில் வென்றது, வங்கதேச பிரிவினைக்கு உதவியது, அணு ஆயுத திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியது, பசுமை புரட்சி, என்று பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இரும்பு பெண்மனி என்று அழைக்கப்பட்ட இந்திரா, கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியன்று, அவரது பாதுகாவலர்களாக இருந்த இரண்டு சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.