இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சதம்; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

 

இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சதம்; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

சிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றின் முக்கிய ஆட்டமான நேற்றைய போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, இமாம் உல் ஹக்கும், ஃபக்கர் சமானும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்தன. அதன்பின்னர், சீனியர் வீரர்களான சோயப் மாலிக்கும், சர்ப்ரஸ் அகமதுவும் நிதானமாக ஆடி 4-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 107 ரன்கள் சேர்த்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 237 ரன்கள் எடுத்து, இந்தியாவிற்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்து.

இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 100 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.  ரோகித் ஷர்மா 111 ரன்களுடன், அம்பத்தி ராயுடு 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்ட நேர முடிவில், 39.3 ஓவர்களில்  238 ரன்கள் எடுத்து  9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது