இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது!

 

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது!

நிதி மோசடி குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றவியல் புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

நியூயார்க்: நிதி மோசடி குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றவியல் புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்விராஜ் பிக்கா (50). சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த இவர், சிஸ்கோ நிறுவனத்தின் உலகளாவிய விநியோக பிரிவில் இயக்குனராக 2017-ஆம் ஆண்டு மத்தி வரை பணியாற்றியவர். சப்ளையர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து சிஸ்கோ தயாரிப்புகளுக்கான பாகங்களை பெறுவதற்கான வேலையை இப்பிரிவானது மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், சிஸ்கோ நிறுவனத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக பிரித்விராஜ் பிக்காவை அமெரிக்க போலீசார் கடந்த 1-ம் தேதி சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். சுமார் 9.3 மில்லியன் டாலர் அளவில் அவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக, அவர் மீது குற்றவியல் புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை, மூன்று மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பிரமாணப் பத்திரத்தின் பேரில், நிபந்தனை ஜாமீனில் அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை வருகிற 18-ம் தேதி நடைபெறவுள்ளது. ஒருவேளை பிரித்விராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2,50,000 அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதவிர நிறுவனத்துக்கான இழப்பீடுக்களையும் அவர் கொடுக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.