இந்திய பொருளாதாரம் எதனால் முடங்கியது? ரகுராம் ராஜன் விளக்கம்

 

இந்திய பொருளாதாரம் எதனால் முடங்கியது? ரகுராம் ராஜன் விளக்கம்

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

வாஷிங்டன்: பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை, இந்தியா வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவை கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன. கடந்த ஆண்டு சர்வதேச பொருளாதாரம் வளர்ந்து வந்த நிலையில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பது வியப்பாக உள்ளது.

இந்தியா தற்போது 7% பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பு சந்தையில் புதிதாக சேரும் மக்களுக்கு இது போதாது. அவர்களுக்காக மாதத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, நமக்கு பொருளாதார வளர்ச்சி அதிகம் தேவை. இந்த வளர்ச்சியுடன் திருப்தி அடையக் கூடாது.

இந்தியாவின் வளர்ச்சி மீண்டும் சுதாரித்து எழும்போது, கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை உருவாக்கி உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றில் இருந்து இந்தியா மீண்டு எழுந்தாலும் கூட கச்சா எண்ணெய் விலை, இந்திய பொருளாதாரத்துக்கு சற்று கடினமானதாகவே இருக்கும். வாராக்கடன் பிரச்னையும் இந்தியாவை பாதித்துள்ளது. அதற்கு திவால் சட்டம் தீர்வு அல்ல. பன்முனை அணுகுமுறை தேவை.

இந்தியாவில், அதிகாரம் முழுவதும் மத்திய அரசிடம் குவிந்திருப்பதும், பிரச்னையின் ஒரு அங்கம் ஆகும். மத்தியில் இருந்தே இந்தியா செயல்பட முடியாது. பலரும் சுமையை ஏற்றுக்கொள்ளும்போதுதான், இந்தியா இயங்கும் என பேசினார்.