இந்திய பங்குச் சந்தைகளை பதம் பார்த்த சவுதி தாக்குதல்! சென்செக்ஸ் 262 புள்ளிகள் வீழ்ந்தது

 

இந்திய பங்குச் சந்தைகளை பதம் பார்த்த சவுதி தாக்குதல்! சென்செக்ஸ் 262 புள்ளிகள் வீழ்ந்தது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 262 புள்ளிகள் குறைந்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமான சவுதியின் அராம்கோ நிறுவனத்தின் 2 உற்பத்தி ஆலைகளில் கடந்த சனிக்கிழமையன்று ஆளில்லா விமான மூலம் தாக்குதல் நடந்தது. இதனால் அந்நாட்டின் 50 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி பாதித்தது. இதனையடுத்து சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது. இதனால் சர்வதேச பங்குச் சந்தைகளில் பலத்த அடி விழுந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. 

பங்குச் சந்தை வீழ்ச்சி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில், ஓ.என்.ஜி.சி., டெக்மகிந்திரா, சன்பார்மா, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டி.சி.எஸ். உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இருப்பினும், மகிந்திரா அண் மகிந்திரா, ஸ்டேட் வங்கி, யெஸ் பேங்க், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் எல் அண்டு டி உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,370 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,149 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.02 லட்சம் கோடியாக சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.42 லட்சம் கோடியாக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 261.68 புள்ளிகள் குறைந்து 37,123.31 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 72.40 புள்ளிகள் வீழ்ந்து 11,003.50 புள்ளிகளில் நிலை கொண்டது.