இந்திய சந்தைகளில் ரூ.3,551 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்!

 

இந்திய சந்தைகளில் ரூ.3,551 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்!

இந்திய மூலதன சந்தைகளில் இந்த மாதத்தில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.3,551 கோடி நிகர முதலீடு செய்துள்ளனர்.

மூலதன சந்தைகள் எனப்படுவது பங்குகள், கடன்பத்திரங்கள் சந்தைகள்தான். இந்த சந்தைகளில் உள்நாட்டு முதலீட்டாளர்களை போன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களும் முதலீடு செய்கின்றனர். அன்னிய முதலீட்டாளர்கள் இம்மாதம் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீட்டை காட்டிலும் விலக்கிய தொகை அதிகமாகும். நிகர அடிப்படையில், பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டில் ரூ.4,953.77 கோடியை திரும்ப பெற்றனர்.

அன்னிய முதலீடு

அதேசமயம் அன்னிய முதலீட்டாளர்கள் இந்த மாதத்தில் கடந்த 12ம் தேதி வரை கடன்பத்திரங்களில் ரூ.8,504.78 கோடி நிகர முதலீடு செய்து இருந்தனர். இதனையடுத்து அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய மூலதன சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.3,551.01 கோடியாக உள்ளது. 

இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு. கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகள் கடும் பின்னடைவை சந்தித்தன. அந்த வாரத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டை கணிசமான அளவில் விலக்கியதும் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். 

அன்னிய முதலீட்டாளர்கள்

மத்திய நிதியமைச்சர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபிறகான 6 பங்கு வர்த்தக தினங்களில் 5 நாட்கள் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்ததை காட்டிலும் விலக்கிய தொகைதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.