இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதிய மூன்றாவது டி20: இந்தியா திரில் வெற்றி!

 

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதிய மூன்றாவது டி20: இந்தியா திரில் வெற்றி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

சென்னை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று, முதல் பேட்டிங்கை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஹோப் மற்றும் ஹெட்மயர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், சஹால் வீசிய பந்தில் ஹோப் 24 (22) மற்றும் ஹெட்மயர் 26 (21) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டேரென் பிரவோவும், நிகோலஸ் பூரானும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் பிரவோ 43 (37) மற்றும் பூரான் 53 (25) ரன்கள் குவித்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

182 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா, 4 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த லோகேஷ் ராகுல், 17 ரன்களில் வெளியேற இந்திய அணி தடுமாறத் தொடங்கியது. இதையடுத்து இணைந்த ஷிகர் தவானும், ரிஷப் பந்த்தும் அதிரடியாக விளையாடி ரன்களை சேகரித்தனர். ரிஷப் பந்த் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து 92 ரன்கள் எடுத்தபோது ஷிகர் தவானும் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி வெற்றி பெற, 1 பந்தில் 1 ரன் எடுக்க வேண்டும் என்ற திரில் நிலை ஏற்பட்டது. வெற்றிக்கான அந்த ரன்னை மணிஷ் பாண்டே எடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷிகர் தவானுக்கும், தொடர் நாயகன் விருது குல்தீப் யாதவுக்கும் வழங்கப்பட்டது.