இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்: சென்னை விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு; பார்வையாளர்களுக்கு தடை!

 

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்:  சென்னை விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு; பார்வையாளர்களுக்கு தடை!

பாதுகாப்பு காரணங்களுக்காகச் சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பாதுகாப்பு காரணங்களுக்காகச் சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து, புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தது. 

இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்குப் பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். இதனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது வருகிறது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உஷார் நிலையில் இருக்கும்படி எச்சரித்துள்ளது. 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.  இதனால் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை பார்வையாளர் அனுமதிச்சீட்டு வினியோகத்தை நிறுத்திவைக்கவும் ஏழு அடுக்கு பாதுகாப்பு தொடரும் என்றும் விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கையானது இன்று அதிகாலை முதல்  அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.