இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே பஞ்சாயத்து பண்ண தயார்; அமெரிக்கா அறிவிப்பு!

 

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே பஞ்சாயத்து பண்ண தயார்; அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ராணுவ நிலைகளை தாக்க முனைந்தது. ஆனால், பாதுகாப்பு படையின் தகுந்த நடவடிக்கையால் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், பாகிஸ்தான் விமானத்தை துரத்தி சென்ற இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்துள்ளது.

இதனிடையே, எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய அரசு, மத்திய படைகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியது. இதனால், இரு நாட்டு எல்லை பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. அதனை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கியுள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாட்டை கடைபிடித்து அமைதி நிலவ முன்வர வேண்டும் என அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

சீனா போன்ற நாடுகள் இந்தியாவும், பாகிஸ்தானும் இந்தப்பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும். இரண்டுமே அணு ஆயுதம் தாங்கியிருக்கும் நாடுகள் என்பதால் தெற்காசிய பகுதி போர்க்களமாக மாறுவது உலக ஒழுங்கிற்கு நல்லதல்ல என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், “இந்தியா – பாகிஸ்தான்  இடையே தற்போது நிலவும் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். இருநாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.