இந்தியா – ஆஸி., முதல் டெஸ்ட் போட்டி: பவுலிங்கில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி நெருக்கடி

 

இந்தியா – ஆஸி., முதல் டெஸ்ட் போட்டி: பவுலிங்கில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி நெருக்கடி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது

-குமரன் குமணன்

 

அடிலெய்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 87.5 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 250 ரண்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே முகமது ஷமி ஆட்டமிழக்க இந்திய இன்னிங்ஸ் முடிவுற்றது.

அடுத்து ஆடத்தொடங்கிய தொடக்க ஆட்டக்காரர்களில் ஃபிஞ்ச், மூன்றாவது பந்திலேயே ரண் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மூன்றில் இரு ஸ்டம்புகள் பறந்து விழ இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சு தொடக்கமே அபாரமாக அமைந்தது.

அடுத்த மூன்று விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றினார் .அவர்களில் புதுமுக வீரர் மார்கஸ் ஹாரிஸ் 26 (57) ரண்களிலும், ஷான் மார்ஷ் 2 (19) ரண்களிலும், க்வாஜா 28 (125) ரண்களிலும் வெளியேறினர். நீண்ட நேரம் நிலைத்த க்வாஜாவை பண்ட் செய்த நல்லதொரு கேட்ச் வெளியேற வைத்தது. அடுத்த விக்கெட்டாக வீழ்ந்தவர் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப். தன் கண்ணெதிரே அடுத்தடுத்து 3 இடதுகை ஆட்டக்காரர்கள் வீழ்வதை பார்த்த பிறகும், இந்த வலது கை ஆட்டக்காரர் பொறுமையாக ஆடிவந்தார். ஆனால் பும்ரா – பண்ட் கூட்டணி பீட்டரின் பொறுமைக்கு முடிவு கட்டியது. அவர் 34 (93) ரண்களில் அவுட் ஆனார் . அடுத்ததாக டிம் பெய்ன் விக்கெட்டை இஷாந்த் ஷர்மாவும் 5 (20), கம்மின்ஸ் விக்கெட்டை பும்ராவும் 10 (47) ரண்கள் கைப்பற்றினர்.

இதனிடையே தாக்குப்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அடிலெய்ட் நகரை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 61 (149) ரண்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 8 (17) ரண்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி 88 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரண்கள் எடுத்திருந்த போது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியாவின் ஸ்கோரை விட 59 ரண்கள் பின்தங்கிய நிலையில், இப்போது களத்தில் இருக்கும் வீரர்கள் இருவரும் எப்படி செயல்படுவார்கள் என்பதை பொறுத்தே நாளை ஆட்டத்தின் போக்கு அமையும் .இவர்கள் இருவரும் இடதுகை ஆட்டக்காரர்கள் என்பதால், ஏற்கனவே கைப்பற்றியிருக்கும் 3 விக்கெட்டுகளை போலவே அஷ்வின், இவர்களது விக்கெட்டுகளை வீழ்த்தவும் வாய்ப்பு உள்ளது. மூன்றாம் நாள் ஆட்டம் நாளை காலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளது.