இந்தியா – ஆஸி., முதல் டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இந்திய அணி; 151 ரன்கள் குவிப்பு

 

இந்தியா – ஆஸி., முதல் டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இந்திய அணி; 151 ரன்கள் குவிப்பு

இந்தியா – ஆஸ்திரேலியா நாய்களுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் அட்ட நேர முடிவில், இந்திய அணி 151 ரன்கள் எடுத்துள்ளது

-குமரன் குமணன்

 

அடிலெய்ட்: இந்தியா – ஆஸ்திரேலியா நாய்களுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் அட்ட நேர முடிவில், இந்திய அணி 151 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரண்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரண்கள் எடுத்திருந்த போது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுற்றது.

இதையடுத்து, மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, கூடுதலாக 44 ரண்கள் சேர்த்து 235 ரண்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டார்க் 15 (34) ரண்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா பந்து வீச்சில் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். அடுத்ததாக டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்த லியோன் சிறிது அதிரடி காட்டினார். 28 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 24 ரண்கள் அடித்து இறுதிவரை களத்தில் நின்றார் அவர்.

லியோனின் சிக்ஸர் தான் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட ஒரே சிக்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷமி பந்துவீச்சில் அடிக்கப்பட்ட அந்த ஷாட்டால் பந்து ,பார்வையாளர் ஒருவரிடம் செல்ல, அவர் அதனை நேர்த்தியாக கேட்ச் செய்து ரசிக்க வைத்தார்.

ஆனால் சற்று நேரத்திலேயே ஹெட் 72 (167) மற்றும் ஹேசில்வுட் 0 (1) ஆகியோரை ஷமி அடுத்தடுத்து வீழ்த்த, ஆஸ்திரேலியா 235 ரண்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த இரு விக்கெட்டுகளை வீழ்த்த பிடித்த கேட்சுகளோடு சேர்த்து ரிஷப் பண்ட் இந்த இன்னிங்ஸில் ஆறு கேட்சுகள் பிடித்துள்ளார்.

இதன் பிறகு 15 ரண்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளை சரி செய்யும் விதமாக நிதானமாக பயணித்தது. குறிப்பாக ஹேசில்வுட் வீசிய முதல் நான்கு ஓவர்களில் ரண்களே எடுக்கப்படவில்லை.

இந்த நிதானத்துக்கு சிறிது நேரத்தில் பலன் கிடைத்தது. சற்றே எளிதாக மாறிய சூழலை பயன்படுத்தி ரண்களை திரட்ட ஆரம்பித்தனர் ராகுலும், விஜய்யும். பல நல்ல ஷாட்களை அடித்தும் இடையில் ஏற்பட்ட மழையின் தாக்கம் காரணமாக இவர்கள் அடித்த சில ஷாட்கள் பவுண்டரியை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஆனால் இந்த மகிழ்ச்சியான சூழல் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அணியின் ஸ்கோர் 63 ரண்களாக இருந்தபோது விஜய் 18 (53) ரண்களில், ஸ்டார்க் பந்துவீச்சில் வெளியேறினார்.

அணியின் ஸ்கோர் 76 ரண்களாக உயர்ந்த போது ராகுல் 44 (61) ரண்களில் பெய்னிடம் கேட்ச் ஆகி இரண்டாவது முறையாக ஹேசில்வுட் பந்துக்கு இரை ஆனார். அரை சதம் நிச்சயம்; சதம் லட்சியம் என்கிற வகையில் தான் அதுவரையில் ஆடி வந்தார் ராகுல். கடைசியில் மிக சாதாரணமாக ஆட்டமிழந்தார்.

விஜய்க்கு பின் வந்த புஜாராவும், ராகுலுக்கு பின் வந்த கோலியும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் ஆடி 71 ரண்களை சேர்த்தனர். ஆட்டம் முடியும் தருவாயில் லியோன் வீசிய பந்தை கோலி லேசாக தொட, அது அருகில் நின்றிருந்த ஃபிஞ்ச் கையில் புகுந்தது. கோலி 34 (104) ரண்களில் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸ் 5 ரண்கள் எடுத்திருந்த போது, ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரண்களை திரட்டிய நான்காவது இந்தியர் மற்றும் அந்த எண்ணிக்கையை  விரைவாக அடைந்த  இந்தியர் என்ற சிறப்புக்களை  தனது 18-ஆவது இன்னிங்ஸில் கோலி பெற்றார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் (1809 ) வி.வி.எஸ்.லட்சுமண் (1236) மற்றும் ராகுல் டிராவிட் (1143)  ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருக்கின்றனர்.

இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 151 ரண்கள் எடுத்திருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தது. புஜாரா 40 (127), ரஹானே 1 (15) ரண்களுடன் களத்தில் உள்ளனர். 166 ரண்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

இந்த முன்னிலை எண்ணிக்கை வலுவானதாக இருந்தாலும், எதிர்பாராத விதமாக கோலி ஆட்டமிழந்தது சற்றே கவலை கொள்ள வைத்துள்ளது. புஜாரா முதல் இன்னிங்ஸ் போன்று மீண்டும் நிலைத்து நின்றால் அவரால் அந்த கவலையை போக்க முடியும். ரஹானேவும் தனது பங்களிப்பை தந்தால், நாளைய நாளின் பெரும்பகுதி பேட்டிங் செய்து இந்திய அணியால் ஆஸ்திரேலியாவுக்கு கடினமான வெற்றி இலக்கை நிர்ணயிக்க இயலும். இன்று ஏற்பட்ட மழை காரணமான தடங்களால், நாளைய ஆட்டம் அரை மணி நேரம் முன்னதாகவே தொடங்க உள்ளது.