இந்தியா-ஆஸி., டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்; ஆஸ்திரேலிய மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா இந்திய அணி?

 

இந்தியா-ஆஸி., டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்; ஆஸ்திரேலிய மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா இந்திய அணி?

இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் அடிலெய்ட் நகரில் நாளை தொடங்குகிறது

-குமரன் குமணன்

 

சிட்னி: இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் அடிலெய்ட் நகரில் நாளை தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஒவர் போட்டி தொடர் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. அதன் முதல் போட்டி, இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரை சோனி சிக்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

டெஸ்ட் தொடர்களை நடத்துவதில் புகழ் பெற்ற நாடுகளில் ஆஸ்திரேலியா முக்கியமான ஒன்று. அந்த அணியை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்வது எந்த அணியினருக்கும் சற்று சவாலாகவே இருக்கும். ஆசிய அணிகளுக்கு அந்த சவால் இன்னும் அதிகமாக, ஆழமானதாக இருக்கும்.

அந்த வகையில் கடந்த 1947-ஆம் ஆண்டில் இருந்து 11 முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. 1981-82 ,1985-86 மற்றும் 2003-04 ஆகிய ஆண்டுகளில் மூன்று தொடர்களை சமன் செய்துள்ள இந்திய அணிக்கு, இதுவரை தொடரை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது இல்லை. ஒரு தொடரில் அதிகபட்ச வெற்றிகளாக 1977-78 ஆம் ஆண்டு ஜந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2 வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது.

இந்நிலையில், ஸ்டீவன் சுமித் ,டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை காரணமாக தடையை அனுபவித்து வருவதால், ஆஸ்திரேலிய அணி சிறிது பலவீனம் அடைந்துள்ளது. இதனை சாதகமாக்கி இந்திய அணி புதிய சரித்திரம் படைக்குமா ? என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது .

இந்திய அணி கேப்டன் கோலி, அணியின் மிக முக்கிய வீரராகவும் இருக்கிறார்.அவரது ஆட்டத்தை பொறுத்தே அணியின் போக்கும் அமைகிறது. அவர்  கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற போது 4 சதங்கள் உட்பட நான்கு போட்டிகளில் 692 ரண்கள் குவித்தார். இதனாலேயே, ஆஸ்திரேலிய அணி மற்றும் அந்நாட்டு ஊடகங்கள் பிரதானமாக கோலியை பற்றியே விவாதித்து அவரை சுற்றியே வியூகங்களையும் அமைத்து வருகின்றன.

பிரித்வி ஷா காயமடைந்த நிலையில் முரளி விஜய், லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க உள்ளனர். அடுத்தடுத்து வரும் புஜாரா மற்றும் ரஹானே பொறுமையாகவும் பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதிலும் வெளிநாட்டு தொடர்களில் தனது பங்களிப்பை கடந்த சில ஆண்டுகளாக அளிக்க தவறி வரும் ரஹானே கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றார்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவையாக எப்போதும் பெரும்பாலான ஆஸ்திரேலிய மைதானங்கள் கருதப்படும். அடிலெய்டு ஒவல் மைதானமும் நாளைய போட்டிக்கு அவ்வாறே தயார் செய்யப்பட்டுள்ளது.

ஆடுகள பராம்பரிப்பாளர் மைதானத்தில் கூடுதல் புற்கள் விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் . இதனால் பந்து பவுன்ஸ் ஆக கூடிய வாய்ப்பு உள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வாய்ப்பு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உள்ளது. அதிலும் ஓரு டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறை கால் பதிக்கும் பும்ராவுக்கு இது பொன்னான வாய்ப்பு.

கடந்த முறை நடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது தான் இந்திய முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். எனவே, இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரி ஷப் பண்ட் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.

பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணிக்கு குறிப்பிடத்தக்க வீரராக தற்போதைக்கு தெரிபவர் உஸ்மான் க்வாஜா மட்டுமே. இவருக்கு பிற வீரர்கள் அளிக்கும் ஓத்துழைப்பே அந்த அணியின் விதியை தீர்மானிக்கும். குறிப்பாக ஷான், மிட்செல் ஆகிய “மார்ஷ் சகோதரர்கள் ” மீது அந்நாட்டு ஊடகங்களும் ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அணியின் பேட்டிங் வரிசை எவ்வளவு மோசமான நிலையை எட்டியுள்ளது என்பதற்கு இவர்கள் இருவரும் உதாரணமாகி விட்டனர்.

அதே சமயம், அந்த அணியின் பந்து வீச்சு வலுவாகவே உள்ளது. வேகம், சுழல் என இரண்டிலுமே நல்ல நிலையில் உள்ள அணியில், ஸ்டார்க் ,சிடில் ,ஹேசில்வுட் மற்றும் மண்ணின் மைந்தனான நாதன் லியொனும் இடம் பெற்றுள்ளார்.

கடந்த ஒராண்டுக்குள் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு வெளிநாட்டு தொடர்களை இழந்திருக்கிற நிலையில் இந்திய அணிக்கு, இந்த தொடர் அணிக்குள்ளும் ரசிகர்களிடையேயும் நம்பிக்கையை மீட்டெடுக்க கிடைத்திருக்கும் வாய்ப்பாக கருதப்படுகிறது.