இந்தியாவுக்கு 175 ரண்கள் இலக்கு: முடிவை நோக்கி பெர்த் டெஸ்ட்

 

இந்தியாவுக்கு 175 ரண்கள் இலக்கு: முடிவை நோக்கி பெர்த் டெஸ்ட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது

-குமரன் குமணன்

பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. சமனில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை அடுத்து தொடங்கிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, அந்நாட்டின் பெர்த் நகரில் நடந்து வரும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 108.3 ஓவர்களில் 326 ரன்களும், 105.5 ஓவர்களில் இந்தியா 293 ரண்களும் எடுத்திருந்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 132/4 என்னும் நிலையிலிருந்து நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் க்வாஜா -பெயன் இணை உணவு இடைவேளை வரை பிரியவில்லை. இடைவேளைக்கு பின் ஸ்கோர் 192-ஆக இருந்தபோது பெயன் 37 (53) ரன்களில் ஆட்டமிழந்தார்.

நேற்று காயத்தால் வெளியேறிய ஃபிஞ்ச் அடுத்த விக்கெட்டாக வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். சிறிது நேரத்திலேயே க்வாஜாவும் ஆட்டமிழந்தார் 72 ரன்கள் எடுத்த அவர், ஷமி வீசிய பவுன்சரில் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த விக்கெட்டாக கம்மின்ஸ், ஸ்டம்பை பதம் பார்த்தது பும்ரா வீசிய ஒரு பந்து. ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து அவர் வெளியேறினார். இந்த நான்கு விக்கெட்டுகளும் ஆறு ரன்கள் இடைவெளியில் விழுந்தவை. அதாவது 192/4 முதல் 198/8 வரை இந்த நான்கு விக்கெட்டுகளும் சாய்க்கப்பட்டன.

அந்த அணியின் ஸ்கோர் 207/9 என்கிற நிலையிலிருந்து மேலும் 36 ரன்களை சேர்த்த பிறகே கடைசி ஜோடியை இந்தியாவால் பிரிக்க முடிந்தது. பும்ரா பந்துவீச்சில் ஸ்டார்க் வீழ்ந்தார். இறுதியாக, 93.2 ஓவர்களில் 243 ரண்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மிக கடினமான இலக்கை துரத்த தொடங்கிய இந்திய அணிக்கு முதல் அதிர்ச்சியை, நான்காவது பந்திலேயே ராகுலை வெளியேற்றியதன் மூலம் அளித்தார் ஸ்டார்க். 0/1 என்ற நிலையில் உள்ளே வந்த புஜாராவை, நான்கு ரன்களில் பெயன் -ஹேசில்வுட் கூட்டணி வீழ்த்திய போது ஸ்கோர் 13/2.

சிக்கலான சூழலில் களம் புகுந்த கோலி, அப்போது எதிர் முனையில் இருந்த விஜய் இருவரும் அடுத்த சில ஓவர்கள் வரை நீடித்தாலும், இருவரையும் சிறிய இடைவெளியில் வழியனுப்பி வைத்தார் லியோன். 2 பவுண்டரிகளுடன் 17 ரண்கள் எடுத்திருந்த கோலி, க்வாஜாவுக்கு ஸ்லிப் கேட்ச் கொடுத்தார் . விஜய் டிரைவ் செய்யும் முயற்சியில் பந்து பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் புகுந்து ஸ்டம்பை தாக்கியது. விஐய் 3 பவுண்டரிகளுடன் 67 பந்துகளில் 20 ரன்கள் அடித்து வெளியேறினார்.

ரஹானேவின் இன்னிங்ஸ் மிகப்பெரிய நம்பிக்கையை அளிப்பது போல் தெரிந்தபோது அவர் அடித்த ஷாட், நேரே பாய்ன்ட் திசையில் நின்றிருந்த ஹெட் கைக்குள் விழுந்தது. அதற்கு முந்தைய 46 பந்துகள் வரை நிதானம் காட்டியவருக்கு, ஹேசில்வுட் வீசிய பந்தை காற்றில் அடித்தே ஆக வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என புரியவில்லை.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 58 பந்துகளில் 4 பவுண்டரிகளோடு 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 பந்துகளில் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளை கடைசி நாளில் ஆஸ்திரேலிய வெற்றி, அதனால் ஏற்படப்போகும் தொடரின் சம நிலை, இவை இரண்டுக்கு மாறாக எது நிகழ்ந்தாலும் அது அதிசயமாக தான் இருக்கும்.

நாளை கண் முன் விரியப்போவது, இந்த ஆண்டிலேயே இந்திய அணி கண்டதை போன்ற மற்றொரு சோக கதையா? இல்லை வெற்றி அல்லது டிராவை பெற்று தர போகும் வீர கதையா என்பது காலை 7.50 மணி முதல் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கும்.