இந்தியாவுக்கு வரும் உலக கோடீஸ்வரர் ஜெப் பியோஸ்! 300 நகரங்களில் போராட்டம் நடத்த தயாராகும் வர்த்தகர்கள்….

 

இந்தியாவுக்கு வரும் உலக கோடீஸ்வரர் ஜெப் பியோஸ்! 300 நகரங்களில் போராட்டம் நடத்த தயாராகும் வர்த்தகர்கள்….

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பியோஸ் அடுத்த வாரம் இந்தியா வரும் போது, 300 நகரங்களில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த சிறு வர்த்தகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது. அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அளிக்கும் அதிரடி சலுகைகளால் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் விற்பனை பாதிக்கிறது. இதனால் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் சலுகை விற்பனைக்கு சில்லரை விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமேசான்

இந்த சூழ்நிலையில், அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பியோஸ் அடுத்த வாரம் தனது நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக இந்தியாவுக்கு  வர உள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாகதான் ஜெப் பியோஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல். ஆனால், ஜெப் பியோஸ் எப்போது இந்தியா வருகிறார், எத்தனை நாட்கள் தங்குகிறார் எப்போது கிளம்புகிறார் போன்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

சிறு வியாபாரிகள்

இருந்தாலும், ஜெப் பியோஸ் இந்தியாவுக்கு வரும் போது அவருக்கு எதிராக நாடு முழுவதும் 300 நகரங்களில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 1 லட்சம் வர்த்தகர்கள் பங்கேற்பார்கள் என சி.ஏ.ஐ.டி. தெரிவித்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் பெரிய அளவில் சலுகைகளை வழங்குவதாகவும், அன்னிய  முதலீடு விதிமுறைகளை மீறியதாகவும் சி.ஏ.ஐ.டி. பல ஆண்டுகளாக குற்றச்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.