இந்தியாவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

 

இந்தியாவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்புஉபகரணங்களை வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்புஉபகரணங்களை வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா-ரஷ்யா இடையேயான 19-வது ஆண்டு உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வருகிறார். புடினின் இந்தப் பயணம், இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி – புடின் ஆகியோர் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது, ரூ.36,792 கோடி மதிப்பிலான எஸ்- 400 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

ஆனால், ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்புஉபகரணங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைவிதிக்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிபர் டிரம்ப் மட்டுமே இந்த தடையை நீக்கக்கூடிய அதிகாரம் படைத்தவர். எனவே, அமெரிக்காவின் தடையை விலக்க அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

அதேசயம், திட்டமிட்டபடி பாதுக்காப்பு உபகரணங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கவும் இந்தா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு, அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், இந்தியாவுக்கு பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை. அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கக்கூடாது. ரஷ்யாவின் முறையற்ற அணுகுமுறைக்கு பதிலடி கொடுக்கவே, இப்படிப்பட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். இந்த ஒப்பந்தத்தை இந்தியா கைவிடுவது தான் நல்லது என்றார்.