இந்தியாவில் ஐ-போன் விற்பனையை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்!

 

இந்தியாவில் ஐ-போன் விற்பனையை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது குறிப்பிட்ட 4 மாடல் ஐ-போன்கள் விற்பனையை நிறுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல தயாரிப்புதான் ஐ-போன். சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்துக்கு கூடுதல் பெருமை சேர்த்தது ஐ-போன்கள். விலை கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் இன்றும் ஐ-போனின் புதிய மாடல் வெளிவந்த உடனேயே அதை வாங்குவதற்கென ஒரு கூட்டமே உள்ளது. இந்தியாவிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுக்காக ஒரு ரசிகர்கள் படையே உள்ளது.

ஆப்பிள் லோகோ

ஆப்பிள் நிறுவனமும் இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து தனது வர்த்தகத்தை நம் நாட்டில் விரிவுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை ஐ-போன்களான எஸ்இ, 6, 6ப்ளஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் ஆகியவற்றின் விற்பனையை நிறுத்தி விட்டது.  இந்த தகவலை இந்திய வர்த்தகர்களிடம் ஆப்பிள் விநியோகஸ்தர்கள், விற்பனை குழு தெரிவித்து விட்டது. மேலும் இனி புதிய என்ட்ரீ மாடல் ஐ-போன்கள் 6எஸ், ஏஎஸ் என்றும் தெரிவித்துள்ளன.

ஐ-போன் ஸ்டோர்

இந்தியாவில் கடந்த நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் அதிகரித்த பிறகுதான், குறைந்த விலை ஐ-போன் மாடல்கள் விற்பனையை நிறுத்த அந்நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இந்தியாவில் ஐ போன்கள் விற்பனையை அளவு (எண்ணிக்கை) அடிப்படையில் மேற்கொள்வதற்கு பதிலாக மதிப்பு அடிப்படையில் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதே இதற்கு காரணம். 

ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிறுத்த முடிவால், இனி குறைந்த விலையில் ஒரு ஐ-போனே(6எஸ்) வாங்க வேண்டுமானால் ரூ.29,500 செலவிட வேண்டும்.