இந்தியாவில் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல்

 

இந்தியாவில் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல்

இந்தியாவில் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடங்கியுள்ளது.

டெல்லி: இந்தியாவில் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியதும் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் அனைத்தும் முழுமையாக மாறிப்போனது. பல டெலிகாம் நிறுவனங்கள் காணாமலே போயின. டெலிகாம் துறையை தொடர்ந்து பிராட்பேண்ட் சந்தையிலும் ஜியோ நிறுவனம் களம் கண்டு ஜிகாஃபைபர் சேவைகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், ஜியோவுக்கு போட்டியளிக்கும் விதமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்தியாவில் தனது ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை தொடங்கியுள்ளது.

பாரத் ஃபைபர் என்று அழைக்கப்படும் இந்த பிராட்பேண்ட் இணைப்பில் அதிகபட்சமாக நொடிக்கு 100 எம்.பி வேகத்தில் (100Mbps) டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சேவையை பெற விரும்பும் பயனர்கள் ரூ.500 முன்பணமாக செலுத்த வேண்டும். இத்தொகை ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் சேவைக்காக ஆகும். மேலும், இதற்கு வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 வாடகை செலுத்த வேண்டும்.

பிராட்பேண்ட் ரீசார்ஜ் திட்டங்களை பொறுத்தவரை பி.எஸ்.என்.எல் பாரத் ஃபைபர் ரூ.777 விலையில் தொடங்குகிறது. இத்திட்டத்தின்படி 50Mbps வேகத்தில் 500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர, இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் மற்றும் 1 ஜி.பி. மெமரியுடன் இலவச மின்னஞ்சல் கணக்கு ஒன்றும் வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் திட்டங்களிலேயே அதிகபட்சமாக ரூ.16,999 வரை திட்டம் உள்ளது. இதில் பயனர்களுக்கு 100Mbps வேகத்தில் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 10Mbps ஆக குறைக்கப்படும். இத்திட்டத்திலும் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், 1 ஜிபி மெமரியுடன் இலவச மின்னஞ்சல் கணக்கு வழங்கப்படுகிறது.