‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்துவோம்’ – ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர்

 

‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்துவோம்’ – ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸ் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸ் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

மத்திய அரசுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதையடுத்து, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் கடந்த 10-ஆம் தேதி பதவி விலகினார். பதவி காலம் முடிவதற்கு முன்பே அவர் பதவி விலகியதையடுத்து, துணை ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும்.  விரைவில் தனியார் வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  நாளை மறுநாள் ரிசர்வ் வங்கி  அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

பணப்புழக்கம் குறித்து முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஆர்.பி.ஐ முக்கிய கவனம் செலுத்தும். மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான முந்தைய விவகாரம் குறித்து கருத்து கூற முடியாது.

ஆர்.பி.ஐக்கு மத்திய அரசுடன் நெருக்கம் உள்ளதாகக் கூறப்படுவது பற்றி எனக்கு தெரியாது. பேச்சுவார்த்தை மூலமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.