இந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 

இந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

இந்த படத்தை  லைகா புரொடக்ஷன்ஸ்  தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இந்த படத்தை  லைகா புரொடக்ஷன்ஸ்  தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

 

பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்தது. இதையடுத்து நேற்றிரவு 9 மணியளவில் படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

 

இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக  நசரத்பேட்டை போலீசார்  கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை ஏற்படுத்துதல், உபகரணங்களைத் தவறாக கையாண்டு மரணத்தை விளைவித்தல்  உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் தற்போது கிரேன் ஆபரேட்டர் ராஜன் தலைமறைவாக இருப்பதால் அவரை தேடும் பணி  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த விபத்து குறித்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் லைகா  நிறுவனம் இறந்தவர்களுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.