இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பரிதாப நிலை! கவலையில் மத்திய அரசு!

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பரிதாப நிலை! கவலையில் மத்திய அரசு!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.2,253 கோடியை இழப்பாக கண்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 5 மடங்கு அதிகமாகும்.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடந்த பல காலாண்டுகளாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 2019 செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியானது. வழக்கம் போல் அந்த காலாண்டிலும் நஷ்டத்தையே கணக்கு காட்டியுள்ளது. அதுவும் சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக.

ஐ.ஓ.பி.

2018 செப்டம்பர் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.487 கோடி மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. 2019 ஜூன் காலாண்டில் கூட ரூ.342 கோடி அளவுக்குதான் நஷ்ட கணக்கு காட்டி இருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.1,204 கோடியாக சரிவடைந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நஷ்டம் அதிகரித்துள்ளது  மற்றும் வட்டி வருவாய் குறைந்துள்ளது போன்ற பாதகமான தகவல்கள் ஒரு புறம் இருந்தாலும், வாராக் கடன் குறைந்துள்ளது என்ற நல்ல தகவலும் உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

கடந்த ஜூன் இறுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர வாராக் கடன் 11.04 சதவீதமாக உயர்ந்து இருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் இறுதியில் அந்த வங்கியின் நிகர வாராக் கடன் 9.84 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மத்திய அரசு கூடுதல் மூலதனமாக ரூ.3,857 கோடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. வங்கி துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் மத்திய அரசுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தொடர் நஷ்டம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சரியான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.