இது மட்டும் நடந்தால், ஜெட் ஏர்வேஸில் ஒவ்வொரு பணியாளரும் முதலாளிதான்!

 

இது மட்டும் நடந்தால், ஜெட் ஏர்வேஸில் ஒவ்வொரு பணியாளரும் முதலாளிதான்!

ஏலத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை அந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் கூட்டமைப்பும், ஆதிகுழுமம் இணைந்து வாங்க உள்ளன. இதன் மூலம் ஜெட் ஏர்வேஸின் ஒவ்வொரு பணியாளரும் முதலாளியாக மாற உள்ளனர்.

இந்திய விமான போக்குவரத்தில் வெற்றிகரமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் வங்கிகளுக்கு ரூ.8,500 கோடியும், வர்த்தகர்கள், லீஸ்கொடுத்தவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் கோடியும் பாக்கி வைத்துள்ளது. 

ஜெட் ஏர்வேஸ் விமானம்

இந்த நிலையில், வங்கிகளில் வாங்கிய  கடனை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்த வங்கிகள் ஸ்டேட் வங்கி தலைமையில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை கைப்பற்றின. 

மேலும், ஜெட் ஏர்வேஸை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தும்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயமும் உத்தரவிட்டது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸின் திவால் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. 

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்

இந்த நிலையில், என்.சி.எல்.டி. நடவடிக்கை வாயிலான ஏலத்தில் ஜெட் ஏர்வேஸின் 75 சதவீத பங்குகளை இணைந்து வாங்க உள்ளதாக ஜெட் ஏர்வேஸ் பணியாளர் கூட்டமைப்பும், ஆதிகுழுமமும் இணைந்து அறிக்கை விடுத்துள்ளது.

ஆக, இது மட்டும் நிஜமானால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளரும் உரிமையாளராக மாறிவிடுவர். 

விமானத்துறையில் திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முதல் தனியார் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் என்பது குறிப்பிடத்தக்கது.