இது சரியில்லை… சமூக விலகலை கடைப்பிடிக்க தவறினால் தளர்வுகள் திரும்ப பெறப்படும்…. கெஜ்ரிவால் எச்சரிக்கை…

 

இது சரியில்லை… சமூக விலகலை கடைப்பிடிக்க தவறினால் தளர்வுகள் திரும்ப பெறப்படும்…. கெஜ்ரிவால் எச்சரிக்கை…

டெல்லியில் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் குடிமகன்கள் மது வாங்க மது கடைகளில் அலை மோதிய சம்பவம் விளைவாக, சமூக விலகல் விதிமுறைகள் கடைப்பிடிக்கவில்லையென்றால் தளர்வுகள் திரும்ப பெறுவதோடு, அந்த பகுதிகளை சீல் வைக்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை செய்தார்.

தற்போது 3வது முறையாக லாக்டவுன் நேற்று முதல் வரும் 17ம் தேதி வரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சகம் சிறிது தளர்வுகளை அறிவித்தது. குறிப்பிட்ட பகுதிகளில் மது கடைகளை திறந்து கொள்ளவும் அனுமதி அளித்தது. இதனையடுத்து டெல்லியில் மது கடைகள் நேற்று திறக்கப்பட்டன. சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்றாமல் மதுகடைகளில் குடிமகன்கள் குவிந்ததால் அடுத்த சில மணி நேரங்களில் மது கடைகளை போலீசார் வலுக்கட்டாயமாக அடைத்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் டெல்லியில் குடிமகன்கள் சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்றாமல் மது வாங்குவதில் ஆர்வம் காட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

சமூக விலகலை கடைப்பிடிக்காத டெல்லி மக்கள்

இதனையடுத்து, சமூக விலகல் விதிமுறைகள் கடைப்பிடிக்கவில்லையென்றால் தளர்வுகள் திரும்ப பெறுவதோடு, அந்த பகுதிகளை சீல் வைக்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை செய்தார். இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிஜிட்டல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மத்திய அரசின் வழிகாட்டுதலினபடி, சில தளர்வுகளை நாங்கள் வழங்கினோம். இன்று நான் வேதனை அடைகிறேன். இன்று சில பகுதிகளில் மக்கள் கூட்டமாக நின்றனர் மற்றும் அவர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை. இது சரியில்லை. சில பகுதிகளில் சமூக விலகல் கடைப்பிடிக்கபடவில்லை என்பது எங்களுக்கு தெரிந்தால் அந்த பகுதி சீல் வைக்கப்படும் மற்றும் தளர்வுகள் திரும்பபெறப்படும்.

கொரோனா வைரஸ்

மக்களின் நலனுக்கான நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இப்போது வரை நாம் லாக்டவுனில்தான் வாழ்கிறோம். கடை உரிமையாளர்கள் பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டும். கடையின் வெளியே சமூக விலகல் விதிமுறைகள் மீறப்பட்டால் அந்த கடை மூடப்படும். 1.5 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு இன்று (நேற்று) முதல் சிறிது தளர்வுகளை அளித்துள்ளது. சிவப்பு மண்டலங்களில் சில தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் டெல்லி முழுவதும் சிவப்பு மண்டலத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவு இல்லாமல் கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியாது. டெல்லி மக்கள் டெங்குவை தோற்கடித்தனர். இப்போது நாம் கொரோனாவையும் வெல்வோம். எப்போதும் லாக்டவுனில் வாழ நீங்கள் விரும்புகிறீர்களா? கொரோனாவை வென்றால் மட்டுமே லாக்டவுன் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.