இது என்ன புது குழப்பம்…. வங்கி கணக்கு தொடங்க மதம் குறித்த தகவலை தெரிவிக்கணும்மா?….

 

இது என்ன புது குழப்பம்…. வங்கி கணக்கு தொடங்க மதம் குறித்த தகவலை தெரிவிக்கணும்மா?….

இந்திய குடிமக்கள், வங்கிகளின் கே.ஒய்.சி. (தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வாடிக்கையாளரை) படிவத்தில் தங்களது மதம் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது போன்ற வதந்தி செய்திகளை நம்ப வேண்டாம் என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

நம் நாட்டுக்குள் சட்டதுக்கு புறம்பாக வந்த அகதிகளை வெளியேற்ற மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மக்களில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமுக வலைதளங்களில் உலாவி வரும் ஒரு வதந்தி செய்தியால் மக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

வங்கி

அதாவது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து நீண்டகால விசா வைத்திருக்கும் இந்துக்கள், புத்த, சீக்கியர்கள், ஜெயின், பார்சிஸ் மற்றும் கிறிஸ்துவ அகதிகள் தங்களது வங்கிகளின் கே.ஒய்.சி. படிவத்தில் அவர்களது மதம் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என்ற வதந்தி தீயாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

கே.ஒய்.சி. படிவம் (மாதிரி)

ஆனால் அந்த தகவல் வெறும் வதந்திதான் என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் இது தொடர்பாக டிவிட்டரில், இந்திய குடிமக்கள் வங்கி கணக்கு தொடங்க/ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது கே.ஒய்.சி.க்காக மதம் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. வங்கிகள் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதாக வரும் எந்தவொரு அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என பதிவு செய்துள்ளார்.