இணையத்தில் ஹிட் அடித்த சம்பவம்! ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தவர்களுக்கு மத்திய பிரதேச போலீசார் கொடுத்த நூதன தண்டனை……

 

இணையத்தில் ஹிட் அடித்த சம்பவம்! ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தவர்களுக்கு மத்திய பிரதேச போலீசார் கொடுத்த நூதன தண்டனை……

மத்திய பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தவர்களுக்கு தண்டனையாக ஒரு கட்டுரை எழுத சொல்லியுள்ளனர் அம்மாநில போலீசார். தற்போது இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தில் சாலையில் செல்லும்போது தலையில் ஹெல்மெட் அணிவது முக்கிய மற்றும் கட்டாயம். இந்த விதிமுறையை மீறுபவர்கள் மீது போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இருந்தாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். பின்பு போலீசாரிடம் தெண்டமாக அபராத்தை செலுத்துகின்றனர்.

போலீசார் வாகன சோதனை

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் வருபவர்களிடம் அபராதம் விதிக்காமல் வித்தியாசமாக அவர்கள் ஏன் ஹெல்மெட் அணிய மறுக்கின்றனர் என்பதற்கான காரணத்தை 100 வார்த்தைகளில் ஒரு கட்டுரை எழுத சொல்லியுள்ளனர்.  போபால் போக்குவரத்து போலீசார் சாலை பாதுகாப்பு வாரத்தின் போது (ஜனவரி 11-17) சாலை பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் வருபவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதில் அவர்கள் ஏன் ஹெல்மெட் அணிய மறுக்கின்றனர் என்பதை 100 வார்த்தைகளில் கட்டுரை எழுதும் தண்டனையை வழங்கினர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு லட்டு கொடுத்த கேரள போலீசார்

போபால் ஏ.எஸ்.பி. பிரதீப் சவுகான் இது குறித்து கூறுகையில், சாலை பாதுகாப்பு வாரத்தின் போது, ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற பாதுகாப்பு விதிமுறையை மீறியதற்கான காரணத்தை 100 வார்த்தைகளில் கட்டுரை எழுதும்படி 150க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்களிடம் கேட்டுகொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையை போலீசார் தொடர்ந்து மேற்கொள்வர் என தெரிவித்தார். கடந்த ஆண்டு கேரளாவில் பாலகாட் மாவட்டத்தில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் லட்டு கொடுத்தனர். அதுவும் பெரிய அளவில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.