இணைப்பு வழங்கிய 24 மணி நேரத்துக்குள் ஜம்முவில் மீண்டும் 2ஜி மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கம்…..

 

இணைப்பு வழங்கிய 24 மணி நேரத்துக்குள் ஜம்முவில் மீண்டும் 2ஜி மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கம்…..

ஜம்முவில் சில பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு தாக்குதல் மற்றும் போலி செய்திகள் பரவியதையடுத்து அங்கு மீண்டும் 2ஜி மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. இணைப்பு வழங்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்துக்குள் மீண்டும் சேவை முடக்கப்பட்டது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 5ம் தேதி மத்திய அரசு நீக்கியது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஜம்மு அண்டு காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று ஜம்மு, சம்பா, கதுவா, உதாம்பூர் மற்றும் ரியாசி ஆகிய 5 மாவட்டங்களில் 2ஜி இன்டர்நெட் சேவை மீண்டும் வழங்கப்பட்டது.

மொபைல் சேவை

மேலும், 35 காவல் நிலைய பகுதிகளில் விதிக்கப்பட்டு இருந்த 114 தடை உத்தரவு நீக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று காலையில் காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது. இந்நிலையில், சில விஷமிகள் ஆன்லைனில் போலி செய்திகளை பரப்ப தொடங்கினர். மேலும் சில பகுதிகளில் தெருக்களில் பாதுகாப்பு படையினர் மீது கல் வீச்சு தாக்குதல் சம்பவங்களும் நடந்தது.

ஸ்ரீநகரில் நேற்று முழுவதும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் நிலவும் எச்சரிக்கை மனநிலை எதிரொலியாகதான் கடைகள் மூடப்பட்டு இருந்தது. ஸ்ரீநகரின் பல பகுதிகளில் நடந்த கல்வீச்சு சம்பவங்களால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மோட்டார் சைக்களில் வந்த இளைஞர்கள் ஜம்மு அண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர்களிடம் கடைகளை திறக்க கூடாது என கூறி சென்றனர். கல் வீச்சு சம்பவங்கள் மற்றும் போலி செய்தி பரவியது போன்ற காரணங்களால் ஜம்முவில் மீண்டும் 2ஜி மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல். 

பாதுகாப்பு பணியில் வீரர்கள்

அதேசமயம், ஜம்முவில் முழுமையாக இயல்பு நிலை உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் 2ஜி சேவை முடங்கியது என டிவிஷனல் கமிஷனர் சன்ஜீவ் வர்மாக கூறினார். இதற்கிடையே டி.ஜி.பி. தில்பாக் சிங் ரஜோரி, உதாம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடுத்து வரும் வாரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.