இடைநிலை ஆசிரியர்கள் 4-வது நாளாக போராட்டம்

 

இடைநிலை ஆசிரியர்கள் 4-வது நாளாக போராட்டம்

ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது

சென்னை: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள், ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் அரசாணைக்குப் பிறகு, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே பெரிய அளவிலான ஊதிய முரண்பாடுகள் நிலவி வருகின்றன. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களையவேண்டி, இம்மாத இறுதியில் போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் உள்ள பள்ளிகல்வித்துறை (டி.பி.ஐ.)வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் போராட்டம் காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு, இதுவரை மயக்கமடைந்த 115 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த இடைநிலை ஆசிரியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றார்.