இடைத்தேர்தல் ரத்து; ஆப்பு யாருக்கு? தே.ஆணையத்துக்கா? கட்சிகளுக்கா? மக்களுக்கா?

 

இடைத்தேர்தல் ரத்து; ஆப்பு யாருக்கு? தே.ஆணையத்துக்கா? கட்சிகளுக்கா? மக்களுக்கா?

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். இதையடுத்து, அவரது திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானது. அந்த தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. வேட்புமனுத் தாக்கலும் தொடங்கி நடைபெற்று வந்தது.

karunanidhi

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை திடீரென ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு அது தனது தனித்துவத்தை இழந்துள்ளதா? சில அரசியல் கட்சிகளுக்கு சாதக, பாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையம் தனக்கு தானே வைத்துக் கொண்ட ஆப்பு?

நிர்ணயிக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சையான அமைப்பு தேர்தல் ஆணையம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் பல்வேறு உத்தரவுகளில் நீதிமன்றங்களே தலையிட முடியாது. இப்படிப்பட்ட அரிய அதிகாரத்தை இந்திய அரசியலமைப்பு தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்துள்ளது.

electioncommission

கருணாநிதி மறைவுக்கு முன்பே, அதிமுக-வின் ஏ.கே.போஸ் காலமானதால் அவரது திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. அதேபோல், அதிமுக-வுக்குள் ஏற்பட்ட சலசலப்புகளுக்கு மத்தியில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதனை நீதிமன்றமும் உறுதி படுத்தியுள்ளது. இதனால், அந்த தொகுதிகளும் காலியாக உள்ளன. சூழல் இப்படி இருக்க, குறிப்பிட்டு திருவாரூர் தொகுதிக்கு மட்டும், தேர்தலை அறிவிக்க காரணம் என்ற கேள்வி சாமானிய மக்களுக்கும் கூட எழுந்தது.

இதைக் கூட யோசிக்காத திறன் படைத்த அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் அதிகார பீடத்தை அலங்கரிக்கிறார்களா என பலரும் கேள்வி எழுப்பினர். பல்வேறு வியூகங்களை வகுத்தே ஒரு தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். ஆனால், திருவாரூர் தொகுதிக்கு மட்டும், தேர்தல் நடத்துவது என அவசர கதியில் முடிவெடுத்து, பின்னர் அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கஜா புயல் நிவாரண பணிகளை காரணம் காட்டி தேர்தலை சில தினங்களிலேயே ரத்து செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் கையாளாகாத்தனமா எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்கும் செயல் எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கட்சிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு?

தற்போதைய சூழலில் எண்ணிக்கை அரசியல் தேவை என்கிற நிலையே இருக்கிறது. எனவே, இந்த 20 தொகுதிகளையும் எதிர்க்கட்சிகள் கைப்பற்றும் பட்சத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக அரசு கவிழும் சூழல் உருவாகும். ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி, திமுக-வை டெபாசிட் இழக்க செய்து, டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். எனவே, இந்த 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, டிடிவி தரப்பு வெற்றி பெற்றால் ஆளும் கட்சியுடன் அவர் பேரம் பேசி அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளது. அதேபோல், அதிமுக-வுக்குள் தனது இருப்பையும் அவரால் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். இல்லையெனில், திமுக உடன் கைகோர்த்து, வெளியிலிருந்து அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் ஆட்சி அமைக்க வழி ஏற்படுத்தி தரவும் வாய்ப்புள்ளது.

stalin

எதிர்க்கட்சி வரிசையில் திமுகவுக்கு 88, காங்கிரசுக்கு 8, முஸ்லிம் லீக் ஒன்று என திமுக கூட்டணிக்கு 97 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். எனவே, 20 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டு திமுக வெற்றி பெற்றால், கூட்டணி கட்சிகளுடன் அதன் பலம் 117 ஆக அதிகரித்து திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கும். இந்த நிலையில், வெளியாகியிருக்கும் திருவாரூருக்கான தேர்தல் ரத்து அறிவிப்பு, அதிமுக-வுக்கு சாதகமாகவும், திமுக-வுக்கு சிறிய சிராய்ப்புகளையும், டிடிவி தினகரனுக்கு சரியான ஆப்பாகவும் அமைந்துள்ளது. ஏற்கனவே, பாஜக-வின் கைப்பாவையாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தேர்தலை அறிவிப்பது போல் அறிவித்து பின்னர் அதிமுக-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில், ரத்து செய்து, மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது எனவும் அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

மக்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு?

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக-வுக்குள் நடக்கும் குழப்பங்களை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். திறனற்ற அரசாக எடப்பாடி அரசு உள்ளது என்ற பொதுவான கருத்தும் நிலவி வருகிறது. எனவே, இடைத்தேர்தல் நடத்தாமல் இதுபோன்ற கோமாளித்தனத்தை செய்து ஒட்டுமொத்த ஆட்சி மாற்றத்தையே தேர்தல் ஆணையம் தடுத்துள்ளது என்பதே பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.

gaja

இதற்கும் மேலாக கஜா புயலால் கடுமையான பதிப்புக்கு உள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் மாவட்டங்களில், திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை காரணம் கட்டி, நிவாரண பணிகளை பாதிப்படைய செய்தது ஏற்கனவே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல அவர்களுக்கு மேலும் ரணத்தை தந்தது.

புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துச் சொல்லி தமக்கென நிவாரண உதவிகளை பெற்று தர எம்எல்ஏ ஒருவர் இல்லாத நிலையில், திருவாரூர் மக்கள் வேதனையில் இருந்தனர். இப்போது, இந்த இடைத்தேர்தல் ரத்து உத்தரவால் தங்களுக்கான பிரதிநிதியை இழந்து நிர்கதியாய் தவிக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தான் பட்ட இடத்திலேயே படும் என்பார்கள் போல.

தான்தோன்றித்தனமாக இடைத்தேர்தலை அறிவித்து, அவசர கதியில் பின்வாங்கி ஏதோ அரசியல் கட்சிகள் கேட்டதற்கு இணங்க ரத்து செய்திருப்பதாக மத்திய அரசு சால்ஜாப்பு சொல்கிறது. இது உண்மையான காரணமா அல்லது மத்திய அரசின் அடிவருடியாக தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கையா? என்ற கொந்தளிப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது.

இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர், சிலர் நீதிமன்றத்தை நாடி அதனை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்தனர். ஒருவேளை அந்த வழக்கு விசாரணைக்கு வந்து திருப்பரங்குன்றம் மற்றும் எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கத்தால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தாமல், திருவாரூருக்கு மட்டும் ஏன் தேர்தல் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தால், அது மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் மிகப்பெரிய தலை குனிவை ஏற்படுத்தியிருக்கும்.