இடைத்தேர்தல் ரத்துக்கும் வேட்பாளர் அறிவிப்பு தாமதத்துக்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் காமராஜ்

 

இடைத்தேர்தல் ரத்துக்கும் வேட்பாளர் அறிவிப்பு தாமதத்துக்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் காமராஜ்

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தாமதத்துக்கும், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தானதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என அமைச்சர் காமராஜ் கூறியுளார்.

சென்னை: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தாமதத்துக்கும், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தானதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என அமைச்சர் காமராஜ் கூறியுளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து திருவாரூருக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்காக திமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தன. ஆனால், அதிமுக வேட்பாளரை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இதற்கிடையே, கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி டிசம்பர் 3-ம் தேதி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா கடிதம் எழுதியிருந்தார் என கூறி திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதிமுகவும், பாஜகவும் இணைந்துதான் திருவாரூர் தேர்தலை ரத்து செய்துவிட்டது என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்புக்காகத்தான் அதிமுக தனது வேட்பாளரை அறிவிக்காமல் இருந்ததா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், திருவாரூர் இடைத்தேர்தலால் கஜா புயல் நிவாரண பணிகள் பாதிக்கப்படும் என மக்கள் அச்சப்பட்டனர். நிவாரண பணிகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டியே தேர்தல் ஆணையத்துக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதினார். இடைத்தேர்தலுக்கு தயாராக இருந்ததால்தான், இன்று வேட்பாளரை அறிவிக்க இருந்தோம். வேட்பாளர் அறிவிப்பு தாமதத்துக்கும், இடைத்தேர்தல் ரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.