இடைத்தேர்தல் தேவையில்லை: உயர் நீதிமன்ற கிளை கருத்து

 

இடைத்தேர்தல் தேவையில்லை: உயர் நீதிமன்ற கிளை கருத்து

இடைத்தேர்தலை நடத்தாமல் தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது

மதுரை: இடைத்தேர்தலை நடத்தாமல் தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். இதையடுத்து, அவரது திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானது.

இதையடுத்து, திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாகவும், அதில் பதிவான வாக்குகள் 31-ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டியதை கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்தது.

இதற்கு ஓரிரு கட்சிகளை தவிர, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன. இதனிடையே, திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைத்தேர்தலே தேவையில்லை, இடைத்தேர்தலை நடத்தாமல் தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் உறுப்பினர் இறந்து விட்டால் 5 வருடத்தில் மீதமுள்ள காலத்திற்கு அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அரசியல் கட்சியை சேர்ந்த வேறொரு உறுப்பினரை நியமிக்கலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிக்கு இந்த கருத்து பொருந்தாது என குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.