இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தல்

 

இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தல்

சவுதாம்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையேயான டி20தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நாட்டிங்காம் டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

 

இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும், இந்திய அணி 273 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் 271 ரன்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிகபட்சமாக விராட் கோலி 58 ரன்களும், ரஹானே 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 184 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.