ஆஸ்திரேலிய தொடரை இந்தியா நிச்சயம் கைப்பற்றும்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நம்பிக்கை

 

ஆஸ்திரேலிய தொடரை இந்தியா நிச்சயம் கைப்பற்றும்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி 20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில், மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர், “பழைய ஆஸ்திரேலிய அணியுடன் தற்போதைய அணியை ஒப்பிட்டால், இந்திய அணி வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனெனில், தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் அதிக அனுபவம் இல்லாத வீரர்களே இடம் பெற்றுள்ளனர். அதனால், இந்த தொடரை வெல்ல இந்திய அணிக்கு சரியான வாய்ப்பு அமைந்துள்ளது.

kholi

ஆஸ்திரேலிய அணி சவாலையும் அளிப்பார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ஆகவே, முதல் 20-25 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்துவிட்டால், நமது வீரர்கள் பெரிய ஷாட்களை அடித்து ரன்களை குவிக்க முடியும். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் அதற்கு ஏற்றது போலவே இருக்கும்.

இந்திய அணியில் சிறந்த வேக பந்துவீச்சாளர்களும் சுழல் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். அவர்களை முறையாக பயன்படுத்தினால் இந்தியா நிச்சயம் தொடரை வெல்லலாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சச்சினின் சாதனையை சமீபத்தில் விராட் கோலி முறியடித்தது குறித்த கேள்விக்கு, ஒரு வீரராக விராட் அதிக வளர்ச்சி அடைந்து வருவதாக சச்சின் தெரிவித்துள்ளார்.