ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அகதிகள் அமெரிக்கா அழைத்து செல்லப்படுவது ஏன்?

 

ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அகதிகள் அமெரிக்கா அழைத்து செல்லப்படுவது ஏன்?

மனுஸ் தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்த 17 அகதிகள், ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மனுஸ் தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்த 17 அகதிகள், ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அமெரிக்கா செல்லும் 17 அகதிகளில் 11 பேர் பாகிஸ்தானியர்கள், 6 பேர் ரோஹிங்கியாக்கள் ஆவர். இவர்கள் அனைவரும் குடும்பமற்ற தனி நபர்களாக அமெரிக்கா செல்கின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வந்த இவர்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

இதன் மூலம், மனுஸ்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் நவுரு தீவு தடுப்பு முகாமிலிருந்து 214 பேர் மீள்குடியேற்றப்பட்டு கொண்டிருப்பதாக தெரிய வருகின்றது.

இவ்வாறான நிலையில், இன்றும் 600 க்கும் மேற்பட்ட அகதிகள் மனுஸ்தீவிலும், 800க்கும் அதிகமான அகதிகள் நவுருத்தீவிலும் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அகதிகள் நல வழக்கறிஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்ததடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தவும், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது. இது ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் பொதுவானது என்றாலும் ஈரான், சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளதால் அந்நாட்டு அகதிகள் நிராகரிக்கப்படும் நிலையும் நீடித்து வருகின்றது.