ஆஸி.,XI – இந்திய அணி இடையேயான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது

 

ஆஸி.,XI – இந்திய அணி இடையேயான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணியுடனான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது

-குமரன் குமணன்

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணியுடனான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவனுடன், இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

அதன்படி, இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி சிட்னியில் நடைபெற்றது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், இந்திய அணி 92 ஓவர்களில் 358 ரன்கள் குவித்தது

மூன்றாம் நாள் இறுதியில் ஆஸ்திரேலிய வாரிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 356 ரண்கள் எடுத்திருந்த நிலையில் இறுதி நாளான இன்று தொடர்ந்த ஆஸ்திரேலிய வாரிய அணி வீரர்கள் ,மேலும் ரண் குவிப்பில் ஈடுபட்டனர். இறுதியாக 151 ஓவர்களில் ஆஸ்திரேலிய வாரிய அணி, 544 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

186 ரண்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆட தொடங்கிய இந்திய அணி ,லோகேஷ் ராகுல் மற்றும் விஜய் மூலம் நல்ல தொடக்கம் கண்டது .இருவரும் இணைந்து 109 ரண்கள் திரட்டிய போது, முதல் விக்கெட்டாக டார்ஸி ஷார்ட் பந்துவீச்சில் பிரையன்ட்டிடம் கேட்ச் கொடுத்து 62 ரன்களில் ராகுல் ஆட்டமிழந்தார். கடந்த ஆண்டு தொடர்ச்சியாக 7 இன்னிங்ஸ்களில் அரை சதங்கள் அடித்திருந்த வீரர் ராகுல் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

அடுத்ததாக ஹனுமா விஹாரி களமிறங்கி 32 பந்துகளில் 32 ரண்கள் எடுக்க, மறு முனையில் தனது அரை சதத்தை சதமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் 132 பந்துகளை எதிர்கொண்டு 129 ரண்கள் குவித்து 15 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களோடு  ஆட்டமிழந்தார் முரளி விஜய். இளம் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா காயமடைந்து முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி விட்ட நிலையில் ,விஜய்யின் இந்த சதம் அவருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

இன்றைய நாள் ஆட்ட நேர இறுதியில் 211-2 என்ற ஸ்கோருடன் இருந்தது இந்திய அணி. இதன் மூலம், ஆஸ்திரேலிய வாரிய அணியுடனான ஆட்டம் டிராவில் முடிந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் வியாழன் அன்று அடிலெய்டில், இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்