ஆஸி.,XI-இந்திய அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து

 

ஆஸி.,XI-இந்திய அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணிக்கும், இந்திய அணிக்குமான நான்கு நாள் பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது

-குமரன் குமணன்

 

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணிக்கும், இந்திய அணிக்குமான நான்கு நாள்  பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடர் மழை பெய்து வருகிறது. ஆஸ்திரேலிய வானவியல் துறையின் நியூ சவுத் வேல்ஸ் மாநில மேலாளர்,  சிட்னி நகரம் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் அளவு மழையை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இடியுடன் கூடிய கனத்த மழை காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணிக்கும், இந்திய அணிக்குமான நான்கு நாள்  பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

சிட்னி மைதானத்தை பொறுத்தவரை,தொடக்கத்திலிருந்தே ஆட்டம் தொடங்குவதற்கான சூழல் நிலவ வில்லை. ஆனால், மதிய வேளையில் மழை அளவு குறைந்திருந்ததால் வீரர்களுக்கு சிறிது நம்பிக்கை அளித்தது. 

மேலும், நடுவர்கள் ஆட்டம் தாமதமாக தொடங்கி முதலில் (சிட்னி நேரப்படி) மாலை 3.30 மணிக்கு தொடங்கும் என்றும், பின்னர் நான்கு மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிப்புகளை வெளியிட்டனர். இவை அப்போதைக்கு உத்வேகம் அளித்தாலும், சில நிமிடங்களிலேயே முதல் நாள் ஆட்டம் மொத்தமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய  இங்கிலாந்து பயணங்களின் டெஸ்ட் தொடர்களின் போதும், பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கும் சூழல் அமையாத நிலையில், அடுத்த வெளிநாட்டு டெஸ்ட் தொடருக்கான முன் தயாரிப்பிலும் இடையூறு ஏற்பட்டிருப்பது ரசிகர்களை வருத்த்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, நாளை காலை 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 10 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பரவலான மழையும் அச்சுறுத்தி வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் 6-ம் தேதி தொடங்க உள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன் திட்டமிடப்பட்டிருந்த ஒரே ஒரு பயிற்சி போட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.