ஆஸி.க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி!

 

ஆஸி.க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது

-குமரன் குமணன்

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணியில் மாற்றமில்லை. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியில் டர்னர் மற்றும் பெஹ்ரென்டாஃப் நீக்கப்பட்டு, ஷான் மார்ஷ் நாதன் லியோன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்று பந்துவீச தீர்மானித்த ஆஸ்திரேலியா, இந்தியாவை 48.2 ஓவர்களில் சரியாக 250 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. கோலி, தனது நாற்பதாவது ஒருநாள் போட்டி சதத்தை பதிவு செய்ததுடன், அணி கௌரவமான நிலையை எட்ட வழிவகுத்தார். 5 புவுண்டரிகளையும் 1 சிக்சரையும் உள்ளடக்கிய விஜய் ஷங்கரின்  46 ரன்கள், கோலிக்கு அடுத்தபடியாக அதிகபட்ச பங்களிப்பாக அமைந்தது. 41 பந்துகளை சந்தித்த விஜய் ஷங்கர் ,துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

ரோஹித் ஷர்மா, தோனி மற்றும் பும்ரா ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். லியோன், குல்டர் நைல் மற்றும் மெக்ஸ்வல் தலா ஓரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 83 ரன்களை விக்கெட் இழக்காமல் 14.2 ஓவர்களிலேயே திரட்டி விட்டது.

ஆட்டம் கை நழுவி போவது போல தெரிந்த போது குல்தீப் யாதவ் ஃபிஞ்சை வெளியேற்றினார். அடுத்த ஒவரை வீசிய கேதார் ஜாதவ், க்வாஜாவின் விக்கெட்டை கைப்பற்றினார். அதற்கடுத்த நாற்பது ரன்களில் மூன்றாவது விக்கெட். மேலும் பத்து ரன்களில் நான்காம் விக்கெட். இந்த விக்கெட்டுகளை முறையே ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் வீழ்த்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், வெறும் நான்கு ரனகளில் குல்தீப்பிடம் வீழ்ந்தார்.

ஜந்தாவது விக்கெட்டாக ஹான்ட்ஸ்கோம்ப், ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்ட போது ஸ்கோர் 37.3 ஓவர்களில் 171/5 ஆக இருந்தது. அதன்பின் அடுத்தடுத்த விக்கெட்டுகளை 218-6, 223-7 மற்றும் 223-8 ஆகிய நிலைகளில் குல்தீப் மற்றும் பும்ரா (பும்ராவின் ஓரே ஒவரில் இரு விக்கெட்டுகள்) வசம் ஆகின .

கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற  சூழலில் விஜய் ஷங்கர் பந்துவீச்சில் வீழ்ந்தார் 52 ரன்கள் அடித்திருந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ். ஓவரின் மூன்றாவது பந்தில் ஆடம் ஸாம்பாவையும் ஷங்கர் வெளியேற்ற, எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

கோலி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் 500-ஆம் வெற்றியாக பதிவானது. 963 போட்டிகளில் 414-ல் தோல்வியும், ஒன்பதில் சமனும் கண்டிருக்கிறது இந்தியா. 40 ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை.

இன்றைய வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்தியா. அடுத்த ஆட்டம் வெள்ளிக்கிழமை ராஞ்சி நகரில் நடக்கிறது.