ஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி

 

ஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது

-குமரன் குமணன்

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது ஆஸ்திரேலிய அணியில் பெஹ்ரெண்டாஃப் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் ஸ்டான்லேக் களமிறங்கினார். லியோன் நீக்கப்பட்டு ஜம்பா சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியில் சிராஜுக்கு பதிலாக விஜய் ஷங்கர் ஓருநாள் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கினார். ராயுடுவுக்கு பதில் ஜாதவ், குல்தீப் யாதவுக்கு பதில் சஹால் ஆகிய மாற்றங்களும் நிகழ்ந்தன. 

தொடக்க ஆட்டக்காரர்கள் கேரி 5 ரன்களிலும ஃபிஞ்ச் 14 ரன்களிலும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சுக்கு இரை ஆகினர். முதலாவதாக கோலி பிடித்த ஸ்லிப் கேட்ச். அடுத்தது ஓரு LBW. 

27/2 என்கிற நிலையிலிருந்து 23 ஓவர்களில் 100/2 என்கிற நிலைக்கு ஆஸ்திரேலியா வந்தபோது சஹால் பந்து வீச வந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்து ஒரு “Wide ball ” என்றபோதிலும் அதன் மூலமாகத்தான் தந்திரமாக மார்ஷ் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அதற்கு முன் 15ஆம் ஒவரில் ஜாதவ் பந்துவீச்சில் மார்ஷ் கொடுத்த கேட்சை தவற விட்டிருந்தார் தோனி. மார்ஷ் 39 (54) 4×3 என்னும் ஸ்கோருடன் வெளியேறினார்.

அதே 23ஆம் ஒவரின் நான்காம் பந்தில் மற்றொரு இடதுகை ஆட்டக்காரரான க்வாஜா சஹாலிடமே கேட்ச் கொடுத்ததால் 34(51) 2×4 என்பதோடு வெளியேற நேரிட்டது. ஆட்டத்தின் 29ஆம் ஒவரின் மூன்றாவது பந்தில் தனது மூன்றாவது விக்கெட்டை சஹால் கைப்பற்றினார். ஸ்டானிஸ், ரோஹித் ஷர்மாவின் ஸ்லிப் கேட்ச் மூலம் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். 10(20) 1×4 அவரது பங்களிப்பு.

பிறகு வந்த களென் மெக்ஸ்வல் அதிரடியாக ஆடினாலும் நிலைத்து நிற்கவில்லை. ஷமியின் புவுன்ஸர் ஓன்றில் டாப் எட்ஜ் ஆன பந்தை, பவனேஸ்வர் 10-15 மீட்டர்கள் வரை ஓடி வந்து கேட்ச் செய்ததால் அதுவரை 18 பந்துகளில் 5 பவுண்டரிகளோடு 26 ரன்கள் எடுத்திருந்த மெக்ஸ்வல் எதிர்பாராத விதமாக தனது 19ஆம் பந்திலேயே ஆட்டமிழந்தார். அப்போதைய ஸ்கோர் 34.5 ஓவர்களில் 161-6.

இதன்பிறகு பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப்-ஜய் ரிச்சர்ட்சன் கூட்டணியால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. 43ஆம் ஓவரில் ஸ்கோர் 206ஆக இருந்தபோது ரிச்சர்ட்சன் சஹால் பந்துவீச்சில் ஜாதவ் கேட்ச் செய்த்தால் ஆட்டமிழந்தார். 23 பந்துகள் சந்தித்த ஆவர் 16 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த இன்னிங்ஸில் அதிக பந்துகளை (63 ) சந்தித்த ஹான்ட்ஸ்கோம்ப் சஹாலின் ஆறாவது விக்கெட்டாக விழுந்தார். 25 ரன்களில் LBW ஆனார் ஹான்ட்ஸ்கோம்ப். 48ஆம் ஒவரின் நான்காவது பந்தில் கடைசி விக்கெட்டாக ஸ்டான்லேக் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் 230 ரன்களில் முடிவுக்கு வந்தது.

231 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா 17 பந்துகளில் ஒரேயொரு பவுண்டரியுடன் ஆட்டமிழந்ததும், ஒரு பவுண்டரியோ சிக்சரோ கூட அடிக்காமலேயே தவன் 46 பந்துகளில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்ததும் பின்னடைவை உருவாக்கின.

தவன் ஆட்டமிழந்த பின் நான்காம் நிலை வீரராக களமிறங்கிய தோனியும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்திருக்க வேண்டியவர். ஸ்டாய்னிஸ் வீசிய பந்தில் மேக்ஸ்வெல் பிடித்திருக்க வேண்டிய கேட்ச் கை நழுவியது. 59-3 என்றாகி இருக்க வேண்டிய ஸ்கோர் ,கோலி ஆட்டமிழந்த நேரத்தில் 113-3 என்றானது கோலி 62 பந்துகளில் 46 ரன்களை 3 பவுண்டரிகளோடு எடுத்தார்.

இதன் பிறகு விக்கெட்டுகள் இறுதிவரை விழவில்லை. கேதார் ஜாதவ் ஜந்தாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி 7 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவரது 7ஆம் பவுண்டரி, வெற்றிக்கான ரண்ணாக பதிவானது. இந்தியா, நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில்  சிடில், ரிச்சர்ட்சன், ஸ்டாய்னிஸ் ஆகியோருக்கு விக்கெட்டுகள் கிடைத்தன. தனது 70ஆம் அரை சதத்தை கடந்த தோனி 6 பவுண்டரிகளோடு 114 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 74 ரன்களில் இருந்தபோது ஒரு கடினமான கேட்ச்சை அரோன் ஃபிஞ்ச் தவற விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகனாக சஹால் தேர்வு செய்யப்பட்டார். தோனி தொடர் நாயகன் ஆனார். இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து சென்று அந்நாட்டு அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடரில் விளையாட உள்ளது.