ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்… வைகோ கைது

 

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்… வைகோ கைது

7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை: 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் மதிமுக இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தது. மதிமுகவின் இந்த போராட்டத்திற்கு திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

அதன்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் சைதாப்பேட்டை சின்னமலை அருகே இன்று காலை ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய வைகோ, 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் மறுத்து வருவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். ஆளுநர் மாளிகை என் மீது வழக்கு தொடுத்தாலும் அதை எதிர்கொள்வேன் என கூறி கெட் அவுட் கெட் அவுட் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கெட் அவுட் என கோஷமிட்டார்.

இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மே-17 இயக்க நிர்வாகிகள், இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.