ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக செயல்படுகிறார் தலைமை செயலாளர் : மு.க.ஸ்டாலின் விமர்சனம்

 

ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக செயல்படுகிறார் தலைமை செயலாளர் : மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மழையை காரணம் காட்டி இரண்டு தொகுதிகள் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தலைமை செயலாளர் எழுதிய கடிதம் மூலம் அவர் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: மழையை காரணம் காட்டி இரண்டு தொகுதிகள் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தலைமை செயலாளர் எழுதிய கடிதம் மூலம் அவர் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. 5 மாநில தேர்தல்களுடன் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால் தமிழக தலைமை செயலாளர் கேட்டுக்கொண்டதன் பேரில் 2 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. இது தமிழக எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், உள்ளாட்சி தேர்தலைக்கூட சந்திக்க தெம்பில்லாத அதிமுக அரசு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மக்களால் விரட்டியடிக்கப்படுவோம் என்கிற அச்சத்தில், தலைமைச் செயலாளரை வைத்து தேர்தலை தள்ளி வைத்திருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக இருவரும் செயல்பட்டிருப்பது நிரூபணமாகி உள்ளது என பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் மற்றொரு ட்வீட்டில், சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் 5 மாநிலங்களுக்கும், இடைத்தேர்தலைச் சந்திக்கும் கர்நாடகாவுக்கும் தேர்தல் தேதிகளை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், ஜனநாயகத்துக்கு விரோதமாக திருப்பரங்குன்றம் – திருவாரூர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்காததன் உள்நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.