ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு

 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் பதவிக்காலத்தை தமிழக அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதனையடுத்து விசாரணையை தொடங்கிய ஆணையம், பல்வேறு நபர்களுக்கு சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்த ஆணையத்துக்கு 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வரை மூன்று மாதகாலம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர், காலக்கெடுவை நீடிக்க ஆணையம் தரப்பில் அடுத்தடுத்து இரண்டு முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையேற்ற தமிழக அரசு, ஆணையத்திற்கு முறையே 6,4 மாதங்கள் என கால அவகாசத்தை நீட்டித்தது.

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் இன்றுடன் முடிவடையும் சூழலில், ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, அதன் பதவிக்காலத்தை 3-வது முறையாக மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது