ஆறுமுகசாமி ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும்: அப்பல்லோ மருத்துவமனை வழக்கு!

 

ஆறுமுகசாமி ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும்: அப்பல்லோ மருத்துவமனை வழக்கு!

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை வழக்கு தொடுத்துள்ளது

சென்னை: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை வழக்கு தொடுத்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 

apollo

அந்த ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், ஜெயலலிதா வீட்டில் பணிபுரிந்தவர்கள், சசிகலா வகையறாக்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள், மற்ற மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அமைச்சர்கள்,சுகாதாரத்துறை செயலர், தமிழக முன்னாள் தலைமை செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்குத் தடை விதிக்கக் கோரி அப்பல்லோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க வேண்டுமென்றால் 21 மருத்துவர்கள் கொண்டு குழுவை அமைக்க உத்தரவிடவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது

arumugasamy

மேலும் வழக்கில் தமிழக அரசு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், வி.கே.சசிகலா ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் முடியும் வரை மருத்துவ, சிகிச்சை விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை  நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வின் முன்னிலையில்  வரவுள்ளது