ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி. பணப்பரிவர்த்தனைக்கு இன்று முதல் சேவை கட்டணம் ரத்து

 

ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி. பணப்பரிவர்த்தனைக்கு இன்று முதல் சேவை கட்டணம் ரத்து

ஆர்.டி.ஜி.எஸ். (real time gross settlement), என்.இ.எப்.டி. (national electronic funds transfer) வாயிலான இணையதள பணப்பரிவர்த்தனைக்கு இன்று முதல் வங்கிகள் சேவை கட்டணம் வசூலிக்காது.

வங்கி வாடிக்கையாளர்கள் மற்றொரு வங்கி கணக்குக்கு ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி.  இணையசேவைகள் மூலம் பணம் அனுப்பலாம். ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனை என்பது உடனடியாக பணப்பரிமாற்றம் செய்வதாகும். என்.இ.எப்.டி. என்பது குறிப்பிட்ட கால இடைவெளிகளில்தான் மொத்தமாக பணபரிமாற்றம் நடைபெறும். இதற்காக வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி கட்டணம் வசூலிக்கிறது. வங்கிகள், அந்த கட்டணத்தை சேவை கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் இருந்து கறந்து விடுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்நிலையில், அண்மையில் மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி. பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. மேலும், இந்த கட்டண ரத்து பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனையடுத்து பெரும்பாலான வங்கிகள் ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப்.டி. சேவைகளுக்காக கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி கொள்வதாக அறிவித்தன. 

ஆர்.டி.ஜி.எஸ்.

மேலும், 2019 ஜூலை 1ம் தேதி முதல் ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி. சேவைகளுக்கான கட்டணம் ரத்து அமலுக்கு வரும் என்று அறிவித்தன. ஆக, இன்று முதல் ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி. சேவைகளுக்கு வங்கிகள் சேவை கட்டணம் வசூலிக்காது.